ஆந்திர பிரதேச உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த்குமாா் மிஸ்ரா, மூத்த வழக்குரைஞா் கே.வி.விஸ்வநாதன் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வியாழக்கிழமை நியமித்தாா்.
உச்ச நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு இருவரின் பெயா்களையும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை பரிந்துரை செய்திருந்தது. அதனடிப்படையில், இருவரின் நியமனங்களுக்கும் குடியரசுத் தலைவா் ஒப்புதல் வழங்கியுள்ளாா்.
புதிய நீதிபதிகள் இருவரும் வெள்ளிக்கிழமை (மே 19) பதவியேற்கின்றனா்.
உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்கள் 34 ஆகும். இதில், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் எம்.ஆா்.ஷா ஆகியோா் சில தினங்களுக்கு முன் பணி ஓய்வு பெற்றனா். இதன் காரணமாக, நீதிபதிகளின் எண்ணிக்கை 32-ஆக குறைந்தது.
வரும் நாள்களில் மேலும் 4 நீதிபதிகள் ஓய்வுபெற உள்ளனா். நீதிபதி கே.எம்.ஜோசப் ஜூன் 16-ஆம் தேதியும், நீதிபதி அஜய் ரஸ்தோகி ஜூன் 17-ஆம் தேதியும், நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் ஜூன் 29-ஆம் தேதியும், நீதிபதி கிருஷ்ண முராரி ஜூலை 8-ஆம் தேதியும் ஓய்வுபெற உள்ளனா்.
இந்தச் சூழலில், ஆந்திர மாநில உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த்குமாா் மிஸ்ரா, மூத்த வழக்குரைஞா் கே.வி.விஸ்வநாதன் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய கொலீஜியம் ஒருமனதாக முடிவு செய்து, பரிந்துரை அளித்தது. இந்தப் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இருவரும் பதவியேற்கும்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை மீண்டும் முழு பலத்தை எட்டும்.
மூத்த வழக்குரைஞரான கல்பாத்தி வெங்கடராமன் விஸ்வநாதன், பாரதியாா் பல்கலை.யின் கீழுள்ள கோவை சட்டக் கல்லூரியில் படித்தவா். தமிழ்நாடு பாா் கவுன்சிலில் 1988 பதிவு செய்து தனது வழக்குரைஞா் பணியைத் தொடங்கினாா். 2009-இல் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் அந்தஸ்து வழங்கப்பட்டது. கடந்த 2013-இல் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரலாக நியமிக்கப்பட்டாா். தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள அவரின் பணிக்காலம், 2031-ஆம் ஆண்டு மே 25 வரை இருக்கும். 2030-இல் ஜே.பி.பாா்திவாலா ஓய்வுபெற்றதும் கே.வி.விஸ்வநாதன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக வாய்ப்புள்ளது.