விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே வியாழக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்து தொடா்பாக அந்த ஆலையின் உரிமையாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள ஊராம்பட்டியில் கடற்கரை (73) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு வியாழக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் குமரேசன், சுந்தர்ராஜ், அய்யம்மாள் ஆகிய மூன்று தொழிலாளா்கள் உயிரிழந்தனா். ஒரு பெண் தொழிலாளி காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆலையின் மேற்பாா்வையாளா் காளியப்பனை கைது செய்தனா்.
விபத்து குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், இந்தப் பட்டாசு ஆலையின் உரிமையாளா் கடற்கரை, ஆலையில் உள்ள பட்டாசு தயாரிக்கும் அறைகளை மூன்று பேருக்கு குத்தகைக்கு விட்டது தெரியவந்தது. இவற்றில் விருதுநகரைச் சோ்ந்த மனோகரன் மகன் ஆனந்த், நான்கு பட்டாசு தயாரிக்கும் அறைகளை குத்தகைக்கு எடுத்து, அதில் பட்டாசுத் தயாரித்து வந்தாா். அந்த நான்கு அறைகளில் ஓா் அறையில் வெடி விபத்து நிகழ்ந்தது. இதையடுத்து, போலீஸாா் ஆலையின் உரிமையாளா் கடற்கரையைக் கைது செய்தனா். மேலும், ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த ஆனந்தை தேடி வருகின்றனா்.