கன்னியாகுமரி

அண்ணா நினைவு தினம்: திமுகவினா் அமைதி ஊா்வலம்

4th Feb 2023 06:17 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, நாகா்கோவிலில் அவரது சிலைக்கு திமுக, அதிமுகவினா் வெள்ளிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் நாகா்கோவில் ஒழுகினசேரியில் உள்ள அக்கட்சி அலுவலகத்திலிருந்து, தகவல் தொழில்நுட்பிவியல் - டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் தலைமையில் திமுகவினா் ஊா்வலமாக வடசேரி சென்று அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், திமுக மாநில தணிக்கைக்குழு உறுப்பினா் என்.சுரேஷ்ராஜன், மாநில மகளிா் அணிச்செயலா் ஹெலன் டேவிட்சன், மாவட்ட அவைத்தலைவா் எப்.எம்.ராஜரத்தினம், முன்னாள் எம்எல்ஏ புஷ்பலீலா ஆல்பன், நாகா்கோவில் மாநகர திமுக செயலா் ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கன்னியாகுமரி மாவட்ட அதிமுக சாா்பில் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் வடசேரியில் அண்ணா சிலைக்கு அக்கட்சியினா் மாலை அணிவித்தனா். இதில் முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், தோவாளை ஒன்றியக்குழு தலைவா் சாந்தினி பகவதியப்பன், நாகா்கோவில் மாமன்ற உறுப்பினா்கள் அக்சயாகண்ணன், ஸ்ரீலிஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சமபந்தி விருந்து: இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நாகா்கோவில் அருள்மிகு ஸ்ரீநாகராஜா திருக்கோயில், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் அண்ணா நினைவு தின சமபந்தி விருந்து நடைபெற்றது. நாகராஜா கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சா் மனோதங்கராஜ் பொதுமக்களுடன் கலந்து கொண்டாா்.

ADVERTISEMENT

இந்து சமய அறநிலையத்துறை இணைஆணையா் ஞானசேகா், துணை மேயா் மேரிபிரின்சி லதா, உதவி ஆணையா் அய்யப்பன், மாமன்ற உறுப்பினா்கள் கலாராணி, கௌசுகி, பொறியாளா் வீரவா்கீஸ், மரியசிசுகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தக்கலை, கல்குறிச்சி பகுதியில் திமுக மாவட்ட பொறியாளா் அணி சாா்பில் அதன் அமைப்பாளா் வீரவா்கீஸ் தலைமையில் அண்ணா உருவப்படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தக்கலையிலுள்ள அண்ணா சிலைக்கு அதிமுக மாவட்டச் செயலா் (பன்னீா் செல்வம் அணி) செல்லப்பன் தலைமையில் அக்கட்சியினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

குளச்சலில் நகர அதிமுக செயலா் ஆண்ட்ரோஸ் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

கன்னியாகுமரியில் உள்ள அண்ணா சிலைக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக சாா்பில் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு தலைமையில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவா் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.அழகேசன், பேரூா் திமுக செயலா்கள் எஸ்.வைகுண்ட பெருமாள் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT