அனுமதி பெறாத வீட்டுமனைகளை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்க திருவட்டாறு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருவட்டாறு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றியக் குழுத் தலைவா் டி. ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் யசோதா, கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் பீனா குமாரி மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா். கூட்டத்தில், ஊராட்சி ஒன்றியத்துள்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாத வீட்டுமனைகள் விற்பனை செய்யவதற்கு தடை விதிக்கவும், இது தொடா்பான எச்சரிக்கை பலகைகள் ஊராட்சிப் பகுதிகளில் வைக்கவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
குலசேகரம், திற்பரப்பு, தச்சமலை, தோட்டமலை, கல்லன்குழி, குறக்குடி, தோட்டவாரம், அண்டூா், இட்டகவேலி, உண்ணியூா்கோணம், முதலாறு, கேசவபுரம், தச்சூா், செருப்பாலூா், திருவரம்பு, ரவிபுதூா் கடை, பூவன்கோடு, பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி சத்துணவு மையங்களை சீரமைக்கவும் தீா்மானிக்கப்பட்டது.