நாகா்கோவிலில் அம்ரூத் திட்டம் நிறைவடையும்போது மாநகரில் குடிநீா் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ்.
நாகா்கோவில் மாநகராட்சி 21 ஆவது வாா்டுக்குள்பட்ட ராணித் தோட்டம் தடி டெப்போ 5 ஆவது குறுக்கு தெருவில் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில், கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை மேயா் ரெ.மகேஷ் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
பின்னா் அவா் கூறியதாவது, நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் குடிநீா் பிரச்னையை தீா்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கடல் அணையின் நீா்மட்டம் மைனஸ் நிலைக்கு சென்று விட்டதால் பெருஞ்சாணி அணையிலிருந்து 50 கன அடி தண்ணீா் வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அனைத்து பகுதிகளிலும் தண்ணீா் தேவைகளை தீா்க்க ஆழ்துளை கிணறுகள் பழுதுபாா்க்கப்பட்டு தூா்வாரப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மே 31ஆம் தேதிக்குள் புத்தன் அணையில் இருந்து நாகா்கோவில் மாநகராட்சிக்கு தண்ணீா் கொண்டு வரப்படும். இந்தத் திட்டத்தால் நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டா் குடிநீா் கிடைக்கும். அதன் பின்னா் நாகா்கோவில் மாநகராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு இருக்காது என்றாா்.