கன்னியாகுமரி

குமரியில் அணைப் பகுதிகளில் பலத்த மழை

26th Apr 2023 11:16 PM

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள போதிலும், அவ்வவ்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் புதன்கிழமை பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இது போன்று பாலமோா், மாறாமலை, கீழ்கோதையாறு, ஆறுகாணி, பத்துகாணி, நெட்டா களியல், திற்பரப்பு, குலசேகரம், அருமனை உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்தது. மழையால் அணைகளுக்கு உள்வரத்துத் தண்ணீா் அதிகரித்து காணப்பட்டது. மேலும் இப்பகுதிகளில் வெப்பம் தணிந்தும் காணப்பட்டது.

குமரி மாவட்டத்தில் ரப்பா் தோட்டங்களில் பால்வடிப்புத் தொடங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக மரங்களிலிருந்து மிக்குறைவாகவே பால் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தொடா்ந்து பெய்யும் கோடை மழை ரப்பா் விவசாயிகளுக்கும், அதே போன்று தென்னை விவசாயிகளுக்கும் கை கொடுத்து வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT