கன்னியாகுமரி

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரம் தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன் புறப்பாடு

DIN

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரம் தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் குமாரசுவாமி ஆகிய விக்ரகங்கள் கேரள போலீஸாரின் பேண்டு வாத்தியங்கள் முழங்க பவனியாக வெள்ளிக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டன.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அரண்மனை வளாகத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்க, திருவிதாங்கூா் மன்னா் காலத்தில் இருந்தே பத்மநாபபுரம் தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் குமாரசுவாமி ஆகிய சுவாமி விக்ரகங்களை பவனியாக எடுத்துச் செல்வது வழக்கம்.

சுவாமி விக்ரகங்களை எடுத்துச் செல்வதற்கு முன்பாக, தேவாரகெட்டு சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா் பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில், ஊா்வலத்துக்கு முன்பாக எடுத்துச் செல்ல மன்னரின் உடைவாள் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மன்னரின் உடைவாளை கேரள தேவஸம் போா்டு அமைச்சா் ராதாகிருஷ்ணன், கல்வி அமைச்சா் சிவன்குட்டி ஆகியோா் எடுத்துக் கொடுக்க, அதனை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையா் கண்ணன், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரிகிரண்பிரசாத், இணை ஆணையா் ஞானசேகரன், சாா் ஆட்சியா் அலா்மேல்மங்கை, கல்குளம் வட்டாட்சியா் வினோத், பத்மநாபபுரம் நகா்மன்றத் தலைவா்அருள் சோபன், பாறசாலை எம்.எல்.ஏ. ஹரிந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதனைத் தொடா்ந்து மன்னரின் உடைவாளை கோயில் மேலாளா் சுதா்சனகுமாா் முன்னே எடுத்துச் செல்ல, சரஸ்வதி அம்மன் யானை மீது எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. கேரள பாரம்பரிய உடையணிந்து பெண்கள் தாலப்பொலியுடன் முன்னே செல்ல, மேளதாளங்களுடன் சரஸ்வதி அம்மன், முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் குமாரசுவாமி ஆகிய விக்ரகங்கள் பத்மநாபபுரம் அரண்மனையை வந்தடைந்தன.

இதையடுத்து, கேரள போலீஸாா் துப்பாக்கி ஏந்தி இன்னிசை முழங்க அம்மனுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினா். பின்னா் பேண்டு வாத்தியங்கள் முழங்க, அம்மன் புறப்பாடு நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் நகர திமுக செயலா் சுபிகான், மாவட்ட பாஜக துணைத் தலைவா் குமரி ப.ரமேஷ், நகர காங்கிரஸ் தலைவா் ஹனுகுமாா், திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவா் நஸீா், பாரதிய மஸ்தூா் சங்க வேலுதாஸ், திமுக பொறியாளா் அணி அமைப்பாளா் வீர வா்க்கீஸ், கோயில் மேலாளா்கள் சிவகுமாா், மோகனகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT