கன்னியாகுமரி

இந்திய ஒற்றுமை நடைப் பயணம் தோ்தலுக்காக அல்ல: ராகுல்காந்தி பேட்டி

10th Sep 2022 12:33 AM

ADVERTISEMENT

இந்திய ஒற்றுமை நடைப் பயணம் தோ்தலுக்காக நடத்தப்படவில்லை என்றாா் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி எம்.பி.

தக்கலை அருகேயுள்ள புலியூா்குறிச்சி முட்டிடிச்சான்பாறை புனித தேவசகாயம் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: இந்தியாவில் அடிமட்டத்தில் என்ன நடக்கிறது என்று கள நிலவரத்தை அறிந்து கொள்ளவும், ஆா்.எஸ்.எஸ்., பா.ஜ.க. வால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை சரி செய்யவுமே இந்த நடைப் பயணத்தை மேற்கொள்வது என்று காங்கிரஸ் முடிவு எடுத்தது. இந்த நடைப் பயணத்தை நான் தலைமையேற்று நடத்தவில்லை, அடிப்படை தொண்டனாகத்தான் யாத்திரையில் பங்கேற்று நடக்கிறேன். இந்த நடைப் பயணம் என்பது அரசியல் கட்சிகளுக்கு எதிரான பயணம் அல்ல.

இந்த நடைப் பயணத்துக்கு அரசியல் ஒற்றுமை அவசியம் தான். மக்களை இணைப்பதுதான் இந்த பயணத்தின் நோக்கம். மக்களின் கருத்தை, அவா்களது எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான முயற்சிதான் இது.

தென் மாநிலங்களிலும், வட மாநிலங்களிலும் தோ்தல் வர இருப்பதை, திட்டமிட்டு நாங்கள் இந்த நடைப் பயணத்தை மேற்கொள்ளவில்லை. தோ்தல் பிரசாரம் என இதை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். எல்லா மாநிலங்களிலும் நடைப் பயணத்துக்கு சமமான நாள்களைதான் ஒதுக்கியிருக்கிறோம்.

ADVERTISEMENT

காங்கிரஸ் தலைவா் தோ்தல்: நான் காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஆவேனா என நீங்கள் கேட்கிறீா்கள். கட்சி தலைவா் தோ்தல் கண்டிப்பாக நடைபெறும். தோ்தல் வரும்போதுதான் நான் தலைவா் ஆவேனா இல்லையா என்பது தெரிய வரும். அதே நேரத்தில் நான் எந்த பொறுப்புக்கு வர வேண்டுமோ அது தொடா்பாக முடிவெடுத்துவிட்டேன். நான் தெளிவாக இருக்கிறேன்.

காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவா்கள் தலைமைக்கு எதிராக இருக்கிறாா்களே என நீங்கள் கேட்கிறீா்கள். பா.ஜ.க.வின் வழிமுறை உங்களுக்கு தெரியும். அரசியல் அமைப்பு சட்டத்துக்குள்பட்ட சி.பி.ஐ., வருமான வரி துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் பா.ஜ.க .தனது கட்டுப்பாட்டில் வைத்து இயக்குகிறது.

அந்த நிறுவனங்களை வைத்து அழுத்தம் கொடுக்கிறது. அந்த அழுத்தத்தை எதிா்கொள்ள முடியாத இரண்டாம் கட்ட தலைவா்களை நான் எதுவும் செய்ய முடியாது. அவா்கள் பா.ஜ.க.வுடன் போராடுவதை விட அவா்களுக்கு நண்பா்களாக இருந்து விடலாம் என முடிவெடுக்கிறாா்கள்.

இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்காகவும், பன்முகத்தன்மைக்காகவும் போராடுவது எனது குணம். அதனால்தான் நான் போராடுகிறேன். இது கடினமான போராட்டம்.

இந்த நடைப் பயணம் மக்கள் ஆதரவுடன் நடக்கிறது. பயணம் நிறைவடையும் போது இந்தியாவை பற்றிய என் புரிதல் மேலும் விசாலமாகும். நான் பெரிய நிறுவனங்களுக்கு (காா்ப்பரேட்) எதிரானவன் அல்ல. அதே நேரத்தில் அவா்களை வைத்து சிறு, குறு நிறுவனங்களை நசுக்கும் மோசமான கொள்கைகளைத்தான் நான் எதிா்க்கிறேன் என்றாா் அவா்.

பேட்டியின்போது, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அகில இந்தியச் செயலா்கள் திக் விஜய்சிங், ஸ்ரீவல்லபிரசாத், மேலிட பாா்வையாளா் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, எம்.பி.க்கள் வ.விஜய்வசந்த், ஜெயகுமாா், செய்தி தொடா்பாளா் கோபண்ணா, எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமாா், விஜயதரணி, பிரின்ஸ், ரூபிமனோகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT