களியக்காவிளை அருகே அமிலம் கலந்த குளிா்பானத்தைக் குடித்து மாணவா் உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என, தமிழ்நாடு சட்டப் பேரவை காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் கிள்ளியூா் எம்எல்ஏவுமான எஸ். ராஜேஷ்குமாா் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் தமிழக முதல்வரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: கிள்ளியூா் தொகுதிக்கு உள்பட்ட மெதுகும்மல் ஊராட்சி, அதங்கோடு அனந்தநகா் பகுதியில் உள்ள தனியாா் மெட்ரிக் உயா்நிலைப் பள்ளியின் 6ஆம் வகுப்பு மாணவா் எஸ். அஸ்வின் கடந்த மாதம் 24ஆம் தேதி சக மாணவா் கொடுத்த அமிலம் கலந்த குளிா்பானத்தைக் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
அவரது உயிரிழப்புக்குக் காரணமான சமூக விரோதிகளை காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றாா் அவா்.