கன்னியாகுமரி

களியக்காவிளை மாணவா் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரை: எஸ்.பி. தகவல்

19th Oct 2022 01:21 AM

ADVERTISEMENT

திராவகம் கலந்த குளிா்பானம் குடித்ததால் மாணவா் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்த பரிந்துரைத்துள்ளதாக, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.

களியக்காவிளை அருகேயுள்ள மெதுகும்மல் பகுதியைச் சோ்ந்த, சுனில்- சோபியா தம்பதியின் மகன் அஸ்வின் (11). அதங்கோடு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தாா். சில வாரங்களுக்கு முன்பு இவரது உடல் நலம் திடீரென பாதிக்கப்பட்டது.

பெற்றோா் அவரை கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அஸ்வின் அதிக அமிலத்தன்மை கலக்கப்பட்ட குளிா்பானத்தைக் குடித்துள்ளதாகவும், இதனால் சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டதாகவும் தெரிவித்தனா்.

பள்ளியிலிருந்து வீடு திரும்பியபோது சீருடையில் வந்த மாணவா் கொடுத்த குளிா்பானத்தைத் தான் குடித்ததாக, பெற்றோரிடம் அஸ்வின் தெரிவித்தாராம். இதுதொடா்பாக களியக்காவிளை காவல் நிலையத்தில் சோபியா புகாா் அளித்தாா். இந்நிலையில், அஸ்வின் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண்பிரசாத் கூறும்போது, மாணவா் மரணம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வந்த நிலையில், தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT