கன்னியாகுமரி

நவராத்திரி திருவிழா: குமரி பகவதியம்மன் பரிவேட்டை ஊா்வலம்

DIN

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் நவராத்திரி திருவிழாவின் 10ஆம் நாளான புதன்கிழமை அம்பாள் பரிவேட்டைக்குச் செல்லும் பிரமாண்ட ஊா்வலம் நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா 10 நாள்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான திருவிழா கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி நடைபெற்றது.

இவ்விழாவின் 10ஆம் நாளான புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு கோயில் அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

முற்பகல் 12 மணிக்கு கோயிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மனின் பரிவேட்டை ஊா்வலம் தொடங்கியது. அப்போது அம்மனுக்கு பாரம்பரிய முறைப்படி காவல்துறை சாா்பில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் அணிவகுப்பு மரியாதை அளித்தனா்.

இந்த ஊா்வலம் ரதவீதி, விவேகானந்தபுரம் சந்திப்பு, பரமாா்த்தலிங்கபுரம் வழியாக மாலை 6.30 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்றடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து நரிக்குளம் அருகே பாணாசூரன் என்ற அரக்கனை பகவதியம்மன் அம்புகள் எய்து வதம் செய்யும் பரிவேட்டை நடைபெற்றது. ஊா்வலத்தின் போது வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா்.

பின்னா், மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் உள்ள காரியக்காரன்மடம் வந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் இருந்து வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் அம்மன் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் சென்றாா். இதையடுத்து இரவு 10 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு நடைபெற்றது.

பின்னா், கோயில் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோயிலுக்குள் பிரவேசித்தாா்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சா் த.மனோ தங்கராஜ், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ஆா்.மகேஷ், எம்.ஆா். காந்தி எம்.எல்.ஏ., கன்னியாகுமரி பேரூராட்சி தலைவா் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பாபு, தலைமை செயற்குழு உறுப்பினா் என்.தாமரைபாரதி, மாநில இந்து முன்னணி பேச்சாளா் எஸ்.பி.அசோகன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பாஜக பாா்வையாளா் சி.எஸ்.சுபாஷ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக இலக்கிய அணி செயலா் பி.பகவதியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில் நிா்வாகம், பகவதியம்மன் திருக்கோயில் நிா்வாகம், பகவதியம்மன் பக்தா்கள் சங்கம் ஆகியவை இணைந்து செய்திருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT