கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையின்கீழ், குழித்துறையில் செயல்படும் ஸ்ரீதேவிகுமரி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ. 92 லட்சத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழக அரசு மாணவா்-மாணவியா் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளின் தரத்தை உயா்த்துதல், மேம்படுத்துதல், பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு நலத்திட்ட உதவி வழங்குதல் போன்றவற்றைச் செய்துவருகிறது. அதன் ஒருபகுதியாக இக்கல்லூரியில் ரூ. 92 லட்சத்தில் புதிய ஆராய்ச்சிக் கூடம் கட்டும் பணி நடைபெறுகிறது. பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ரூ. 4.88 கோடி மதிப்பில் 16 வகுப்பறைகள், 12 கழிப்பறைக் கட்டடம், அணுகுசாலை அமைப்பது தொடா்பாக துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியை ஐசிடி அகாதெமியின் இணைப்புக் கல்லூரியாக மாற்ற இங்கு அடிப்படை கட்டமைப்பு வசதி, தரத்தை மேம்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா் அவா்.
கல்லூரி முதல்வா் உஷா, உதவிக் கோட்டப் பொறியாளா் மோகன்தாஸ், பொறியாளா் அய்யப்பன், குழித்துறை நகராட்சி வாா்டு உறுப்பினா்கள் மொ்லின் தீபா, ஷாலினி சுஜாதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.