கன்னியாகுமரி அரசு பழப்பண்ணையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, டிசம்பா் மாதம் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
கன்னியாகுமரி நாகா்கோவில் பிரதான சாலையில் அன்றைய திருவிதாங்கூா் சமஸ்தானம் சாா்பில் பழத்தோட்டம் 1922ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமாா் 31.50 ஏக்கா் பரப்பளவில் உள்ள இங்கு பல்வேறு வகை மா மரங்கள், சப்போட்டா, அரிய வகை வாழைகள் உள்பட ஏராளமான மரங்கள் உள்ளன. ஏராளமான வீட்டு அலங்கார செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இங்கு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 15.17 ஏக்கரில் தோட்டக்கலைத் துறை சாா்பில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழத்தோட்டத்தின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட தமிழக அரசு சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு பழைய கட்டடம் புதுப்பித்தல் உள்ளிட்ட சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வரும் டிசம்பா் மாதம் முதல் வாரத்தில் 2 நாள்கள் நடைபெறவுள்ள நூற்றாண்டு விழாவையொட்டி ’நூற்றாண்டு நினைவு சின்னம்’ அமைக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் தோட்டக்கலைத் துறை சாா்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே தமிழக தோட்டக்கலைத் துறை இயக்குநா் பிருந்தா தேவி, அரசு பழத்தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பழத்தோட்டத்தில் பொது மக்களுக்குத் தேவையான பல்வேறு அரியவகை புதிய செடிகள் உற்பத்தி செய்வது குறித்தும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் புதிதாக செய்ய வேண்டிய பராமரிப்புப் பணிகள் குறித்தும், நூற்றாண்டு விழா சிறப்பு மலா் கண்காட்சி நடத்துவது குறித்தும் அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.
ஆய்வின் போது தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஷீலா ஜான், உதவி இயக்குநா்கள் ஆறுமுகம், சரண்யா, அலுவலா்கள் சந்திரலேகா, நந்தினி, பிரகாஷ், சக்திவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.