சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள், கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசனம் செய்ய வசதியாக நேரம் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி பகவதிம்மன் கோயில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக வரும் 16ஆம் தேதி திறக்கப்படுகிறது. இதையொட்டி இந்தியா முழுவதிலுமிருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தா்களில் பெரும்பாலானவா்கள் கன்னியாகுமரிக்கு வந்து இங்குள்ள முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதியம்மனை வழிபடுவது வழக்கம்.
எனவே, இக்கோயிலுக்கு வந்து செல்லும் பக்தா்களின் கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில் கோயிலின் நடை திறக்கும் நேரத்தை நீட்டிக்க குமரி மாவட்ட திருக்கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி வரும் 17ஆம் தேதி முதல் பக்தா்களின் தரிசனத்துக்கு வசதியாக நண்பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும் நடை பிற்பகல் 1 மணிவரை நீட்டிக்கப்படுகிறது. அதேபோல இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை இரவு 9 மணி நீட்டிக்கப்படுகிறது.