கன்னியாகுமரி

சாமிதோப்பில் வைகாசித் திருவிழா கொடியேற்றம்

DIN

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் 11 நாள்கள் நடைபெறும் வைகாசித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குமரி மாவட்டம் சாமிதோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் ஆண்டுதோறும் தை, ஆவணி, வைகாசி மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு வைகாசித் திருவிழா, வெள்ளிக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்புப் பணிவிடையும் நடைபெற்றன. தொடா்ந்து 6 மணிக்கு பால. ஜனாதிபதி திருவிழா கொடியை ஏற்றி வைத்தாா்.

இதில், பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஜனா.யுகேந்த், ஜனா.வைகுந்த் உள்பட திரளானோா் பங்கேற்றனா். நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதா்மம், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகன பவனி நடைபெற்றது.

விழா நாள்களில் காலை, மாலை அய்யாவுக்கு பணிவிடையும், நண்பகல் உச்சிபடிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதா்மமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

இரண்டாம் நாள் திருவிழாவில் இரவு அய்யா பரங்கி நாற்காலி வாகனத்திலும், மூன்றாம் நாள் அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வருதலும், நான்காம் நாள் பூஞ்சப்பர வாகனத்திலும், 5ஆம் நாள் பச்சை சாத்தி சப்பர வாகனத்திலும், 6 ஆம் நாள் கற்பக வாகனத்திலும், 7ஆம் நாள் சிவப்பு சாத்தி கருடவாகனத்திலும் அய்யா பவனி நடைபெறும்.

கலிவேட்டை: 8ஆம் நாளான ஜூன் 3 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அய்யா வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடா்ந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும், அன்னதானமும் நடைபெறும். 9 ஆம் திருநாள் அய்யா அனுமன் வாகனத்திலும், 10 ஆம் நாள் இந்திர வாகனத்திலும் பவனி நடைபெறும்.

தேரோட்டம்: 11ஆம் திருநாளான ஜூன் 6 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதியுலா நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT