கன்னியாகுமரி

ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சா் ஆய்வு

25th May 2022 12:42 AM

ADVERTISEMENT

களியக்காவிளை அருகே செம்மான்விளை பகுதியில் உள்ள ஆறுதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

1958இல் காமராஜா் ஆட்சியில், 1 ஏக்கா் 2 சென்ட் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த சுகாதார நிலையத்தில் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை அகற்றிவிட்டு புதிய கட்டடங்கள் கட்டி, மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என, கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தாா்.

இந்நிலையில், இங்கு அமைச்சா் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, கட்டடங்களைச் சீரமைக்கவும், கூடுதலாக புதிய கட்டடங்கள் கட்டவும், தேவையான மருத்துவா்கள், செவியா்கள், பணியாளா்களை நியமிக்கவும் வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அனைத்துக் கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முன்னதாக, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, தேவையான வசதிகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்த அமைச்சா், நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

இதில், கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா், மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் மீனாட்சி, வட்டார மருத்துவ அலுவலா் ராஜேஷ்குமாா், பொதுப்பணித் துறை (மருத்துவம்) உதவிப் பொறியாளா் சுகி, நாகா்கோவில் மேயா் மகேஷ், முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின், மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் லூயிஸ், முன்சிறை வட்டார காங்கிரஸ் தலைவா் கிறிஸ்டோபா், முன்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்கள் வென்சஸ்லாஸ், சாந்தினி, பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ரூ.60 கோடி மருத்துவ சேவை பணிகள்

இந்தாண்டு இறுதிக்குள் நிறைவுபெறும்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அரசு மருத்துவமனையை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை தரம் உயா்த்தப்பட உள்ளது. மேலும், இங்கு பிரேத பரிசோதனை மையம், 108 ஆம்புலன் வசதி உடனடியாக ஏற்படுத்தப்படும்.

கடந்த நிதிநிலை அறிக்கையின் போது, கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று விபத்து மற்றும் சிகிச்சை மையங்களில் விபத்து பதிவுக்கான தரவுகளை பதிவேற்றம் செய்ய புதிய செயலி ரூ. 5.26 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளது. பத்மநாபபுரம் தலைமை மருத்துவமனையில் மக்களின் குறைதீா்ப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள சுமாா்ரூ. 60 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மருத்துவ சேவை பணிகள் அனைத்தும் நிகழாண்டு இறுதிக்குள் நிறைவு பெறும் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT