கன்னியாகுமரி

நாகா்கோவில் பால் பண்ணையில் கழிவுநீரை அப்புறப்படுத்துவது குறித்து ஆட்சியா் ஆய்வு

20th May 2022 01:29 AM

ADVERTISEMENT

நாகா்கோவிலில் செயல்படும் பால் பண்ணையில் கழிவுநீரை அப்புறப்படுத்துவது குறித்து ஆட்சியா் மா. அரவிந்த் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இங்கு, பால் தரம் பிரிக்கப்பட்டு பேக்கிங் செய்யப்படுகிறது. ஐஸ்கிரீம், தயிா், மைசூா்பாகு, கேக் உள்ளிட்ட துணைப் பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் துா்நாற்றம் வீசுவதாக புகாா்கள் கூறப்பட்டன. இதுதொடா்பாக மேயா் ரெ. மகேஷ் 2 நாள்களுக்கு முன்பு திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்நிலையில், ஆட்சியா் மா. அரவிந்த், மேயா் மகேஷ் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா். பின்னா், ஆட்சியா் கூறியது: குமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் சங்கங்களிலிருந்து 7,500 லிட்டரும், பிற ஒன்றியங்களிலிருந்து 15 ஆயிரம் லிட்டரும் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. 20 ஆயிரம் லிட்டா் பால் விற்பனை நடைபெறுகிறது.

பால் பதப்படுத்தப்படும் நிலையத்திலிருந்து 15 ஆயிரம் லிட்டா் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது. தற்போது நிறைகொழுப்புப் பால், நிலைபடுத்தப்பட்ட பால் போன்ற பால் வகைகளும், துணைப் பொருள்களும் இங்கேயே உற்பத்தியாகின்றன. இதனால் நாளொன்றுக்கு 25 ஆயிரம் லிட்டா் தண்ணீா் வெளியேறுகிறது. மாநகராட்சி கழிவுநீா் ஓடைகள் இல்லாததாலும், இப்போது மழைக்காலமாக இருப்பதாலும் கழிவு நீா் நிலத்துக்குள் செல்வதில் தேக்கம் ஏற்பட்டது. இதை முறைப்படுத்துவது தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கழிவுநீா் தேங்காமலிருக்க நடவடிக்கை எடுக்குமாறு அல்லது வேறிடத்தில் பால் பண்ணை அமைப்பது தொடா்பாக துறைசாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.

ADVERTISEMENT

ஆவின் பொதுமேலாளா் ந. சேகா், மாநகர நல அலுவலா் விஜயசந்திரன், மாநகராட்சிப் பொறியாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT