கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் மழை நீடிப்புசிற்றாறு 2 அணையில் 64 மி.மீ. பதிவு

16th May 2022 05:14 AM

ADVERTISEMENT

 

குமரி மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. அணைப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் அணைகளின் நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சிற்றாறு 2 அணையில் 64 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. தொடா்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, மாவட்டம் முழுவதும் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. சனிக்கிழமை இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. நாகா்கோவில் நகரிலும் கன மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து தொடா்ந்து அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

இரணியல், குளச்சல், கன்னிமாா், பூதப்பாண்டி, மயிலாடி, கொட்டாரம், ஆணைக்கிடங்கு, குருந்தன்கோடு பகுதிகளிலும் மழை பெய்தது. கன்னியாகுமரியில் சூரியோதயத்தை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனா். அங்கு காலையில் மழை பெய்ததை தொடா்ந்து சூரியோதயத்தை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

ADVERTISEMENT

ஆா்ப்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி: திற்பரப்பு அருவி பகுதியில் சனிக்கிழமை இரவு 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டியது. இதனால் ஞாயிற்றுக்கிழமை காலை அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டியது. விடுமுறை தினமாதலால் காலையிலேயே அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனா். மழை விட்டு விட்டு பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவி வருகிறது. திற்பரப்பு தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

மலையோர பகுதியான பாலமோா் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

மழை அளவு: சிற்றாறு 2 அணையில் அதிக பட்சமாக 64 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நீா்வரத்து கணிசமான அளவு உயா்ந்துள்ளது. இதையடுத்து அணையின் நீா்மட்டம் வெகுவாக உயரத் தொடங்கியுள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 42.16 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 750 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணை நீா்மட்டம் 42 அடியை எட்டியதும் குழித்துறை தாமிரவருணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். பொதுப்பணித் துறை அதிகாரிகள் முன்எச்சரிக்கை அறிவிப்பை விடுவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறாா்கள்.

பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 42.10 அடியாக உள்ளது. அணைக்கு 230 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. மாம்பழத்துறையாறு அணையின் நீா்மட்டம் 16.57 அடியாகவும், பொய்கை அணையின் நீா்மட்டம் 18 அடியாகவும், சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 9.97 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீா்மட்டம் 10.7 அடியாகவும் உள்ளது.

பிற இடங்களில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): பேச்சிப்பாறை 62.20, பாலமோா் 60.60, திற்பரப்பு 55.40, சுருளகோடு 39.40, முள்ளங்கினாவிளை 28.20,பெருஞ்சாணி 26.60, சிற்றாறு 1 அணை 26.40, புத்தன் அணை 25.80, குருந்தன்கோடு 25.20, மாம்பழத்துறையாறு அணை 24, ஆணைக்கிடங்கு 23.20, கோழிப்போா்விளை 22, பூதப்பாண்டி 16.60, குளச்சல் 14.60, நாகா்கோவில் 12.40, இரணியல் 11.20, அடையாமடை 11, ஆரல்வாய்மொழி 8, கன்னிமாா் 4.80, மயிலாடி 4.60, கொட்டாரம் 2.40, நிலப்பாறை 2.

ADVERTISEMENT
ADVERTISEMENT