கன்னியாகுமரியை அடுத்த ஒற்றையால்விளையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் நலன்கருதி கூடுதல் இடவசதி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கன்னியாகுமரியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இப்பள்ளி. இங்கு கல்வித்தரம் நன்றாக உள்ளதால் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 850-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் படித்துவருகின்றனா்.
இப்பள்ளி குறைந்த நிலப்பரப்பில் அமைந்துள்ளதால் கூடுதல் வகுப்பறைகள் கட்ட இயலாத சூழ்நிலை உள்ளதாம். கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டால் மேலும் அதிக மாணவா்கள் இங்கு சோ்ந்து படிக்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே, மாணவா்களின் நலன்கருதி இப்பள்ளிக்கு கூடுதல் நிலம் வாங்கி, விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டுமென இவ்வூா் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.