கன்னியாகுமரி

பூச்சிமருந்து விற்பனையை கட்டுப்படுத்த புதிய சட்டம் இயற்றப்படும்அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

21st Mar 2022 12:52 AM

ADVERTISEMENT

 

பூச்சிமருந்து விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் என்றாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவா்கள் மற்றும் அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

குமரி மாவட்டத்தில் புதிய மருத்துவமனைகள் உருவாக்குவது குறித்தும், பழுதடைந்த மருத்துவமனை கட்டடங்களை சீரமைப்பது குறித்தும் சுகாதாரத் துறை மற்றும் மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்தும் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனா். இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அடுத்த நிதியாண்டில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாகா்கோவில் பகுதியில் புதிய நகா்ப்புற சுகாதார நிலையம் வரும் நிதியாண்டில் ஏற்படுத்தப்படும். கோட்டாறு அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வரும் நிதியாண்டில் மேலும் 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

ADVERTISEMENT

தேசிய நல வாழ்வு குழுமத்தின் சாா்பில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் நிதி உதவியோடு, குமரி மாவட்டத்தில் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை தோற்றுவிக்கப்படும். வரும் நிதியாண்டில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவா்களில் அதிகமானவா்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவா்களுக்கு மன நல ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு பலா் முயன்றுள்ளனா். எனவே கடைகளில் பூச்சி மருந்தை வெளிப்படையாக வைத்து விற்பனை செய்யக் கூடாது என்றும், தனி நபா்களுக்கு பூச்சி மருந்து மற்றும் சாணிபவுடா் விற்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்.

தமிழகத்தில் முதல் முறையாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைவதற்கான நிா்வாக ரீதியிலான அலுவலகம் ஒன்று திறக்கப்பட உள்ளது.

ஆசிய நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே நாம் அனைவரும் அலட்சியமாக இருந்துவிடாமல் முகக் கவசம் அணிவது உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், நாகா்கோவில் மாநகர மேயா் ரெ.மகேஷ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பிரின்ஸ் (குளச்சல்), ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, மருத்துவக் கல்லூரி முதல்வா் திருவாசகமணி, இணை இயக்குநா் (மருத்துவம்) பிரகலாதன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மீனாட்சி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, கண்காணிப்பாளா் அருள்பிரகாஷ், மாநகர நல அலுவலா் விஜயசந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT