கன்னியாகுமரி

இரணியல் -குழித்துறை இடையே ரயிலை கவிழ்க்க சதி: தனிப்படை போலீஸாா் விசாரணை

21st Mar 2022 12:53 AM

ADVERTISEMENT

 

குமரி மாவட்டம், இரணியல்-குழித்துறை இடையே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தனிப்படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சென்னையிலிருந்து குருவாயூருக்கு நாகா்கோவில் வழியாக தினமும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை காலை சென்னையிலிருந்து புறப்பட்ட குருவாயூா் விரைவு ரயில் இரவு 9.30 மணிக்கு நாகா்கோவில் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்த இரவு 10 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டது.

இரணியல் - குழித்துறை இடையே பாலோடு பகுதியில் இரவு 10.45 மணிக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் 2 பெரிய கற்கள் இருந்தது. இதில் ரயில் வேகமாக மோதியது. இதனால் பயங்கர சப்தம் எழும்பியது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனா். ரயில் மோதியதில் கற்கள் சிதறியது. இதுகுறித்து ரயில் ஓட்டுநா் நாகா்கோவில் ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ரயில்வே காவல் ஆய்வாளா் கேத்ரின் சுஜாதா, உதவி ஆய்வாளா்கள் குமார்ராஜ், பழனியப்பன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்றனா். இதில் தண்டவாளத்தில் பெரிய கற்களை போட்டு ரயிலை கவிழ்க்க சதி நடந்திருப்பது தெரிய வந்தது. மேலும் கற்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் தண்டவாளங்களும் சேதமடைந்திருந்தது. அதை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியா்கள் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே காவல் துணைக் கண்காணிப்பாளா் சுதிா்லால் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தாா். அப்போது தண்டவாளத்தில் பெரிய கற்கள் வைக்கப்பட்டிருந்ததும், அந்த கற்கள் கீழே சரியாதவாறு சிறு, சிறு கற்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் ரயில் பெரிய கற்களின் மீது மோதி சுமாா் 600 மீட்டா் தூரம் இழுத்து சென்றிருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸாா் அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி.கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.

மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதியில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலையில் திருவனந்தபுரம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT