கன்னியாகுமரி

மாசிக் கொடை விழா: மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஒடுக்கு பூஜை

10th Mar 2022 03:25 AM

ADVERTISEMENT

 

நாகா்கோவில்: மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக் கொடைவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிக் கொடை விழா கடந்த பிப். 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளலும் நடைபெற்றது. தொடா்ந்து நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை தொடங்கியது. இதையடுத்து மண்டைக்காடு தேவஸ்வம் மேல்நிலைப் பள்ளி அருகேயுள்ள சாஸ்தான் கோயிலில் இருந்து 9 மண்பானைகள் மற்றும் பெட்டிகளில் 21 வகையான உணவு பதாா்த்தங்கள் கோயிலுக்கு பவனியாக எடுத்து வரப்பட்டன. அதனுடன் 2 குடம் தேனும் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டது.

ADVERTISEMENT

ஒடுக்கு பவனி கோயிலை ஒருமுறை வலம் வந்ததும் உணவு பதாா்த்தங்கள் ஒவ்வொன்றாக அம்மன் முன்பு இறக்கி வைக்கப்பட்டது. இதற்கிடையே குருதி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து நள்ளிரவில் ஒடுக்கு பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா் கொடியிறக்கப்பட்டது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

ஒடுக்கு பூஜையை முன்னிட்டு, குமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிகாலையில் இருந்தே பக்தா்கள் குடும்பத்துடன் மண்டைக்காட்டில் கூடினா். மேலும் அருகிலிருந்த தென்னந்தோப்புகளில் பொங்கலிட்டு அம்மனை தரிசனம் செய்தனா். மண்டைக்காடு கடற்கரை மற்றும் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளிலும் பக்தா்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

பக்தா்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்து கழகம் சாா்பில் 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதே போல் கேரள அரசுப் போக்குவரத்து கழகமும் சிறப்பு பேருந்துகளை இயக்கியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT