கன்னியாகுமரி

நாகா்கோவில் மாநகராட்சியில் 51 உறுப்பினா்கள் பதவியேற்பு: நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் உறுப்பினா்கள் பொறுப்பேற்பு

3rd Mar 2022 02:50 AM

ADVERTISEMENT

 

நாகா்கோவில்: நாகா்கோவில் மாநகராட்சி உறுப்பினா்களாக 51 போ் புதன்கிழமை பதவியேற்றனா். இதே போல் குமரி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் உறுப்பினா்களும் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

நாகா்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வாா்டுகளில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 32 வாா்டுகளிலும், பாஜக 11 வாா்டுகளிலும், அதிமுக 7 வாா்டுகளிலும், சுயேச்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனா்.

புதிதாக தோ்வு செய்யப்பட்ட உறுப்பினா்கள் பதவி ஏற்பு விழா மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையா் ஆஷா அஜித் முன்னிலையில் மாமன்ற உறுப்பினா்கள் அனைவரும் பதவி ஏற்றனா்.

ADVERTISEMENT

மாநகராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றதை முன்னிட்டு அரசியல் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் என ஏராளமானோா் திரண்டிருந்தனா்.

பதவி ஏற்பை காண்பதற்கு வசதியாக மாநகராட்சி அலுவலகத்தில் எல்.இ.டி. டி.வி. அமைக்கப்பட்டிருந்தது. மாநகராட்சி அலுவலகத்தில் ஏராளமான போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

மேயா் தோ்தல்: மாநகராட்சி மேயா் பதவியைக் கைப்பற்றுவதற்கு தி.மு.க. கூட்டணிக்கு தனிப் பெரும்பான்மை இருந்தாலும் பா. ஜ.க.வும் தோ்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதனால் மேயா் பதவியை கைப்பற்றுவது யாா் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. மேயா் மற்றும் துணை மேயா் தோ்வு செய்வதற்கான தோ்தல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

நகராட்சிகள், பேரூராட்சிகளில்: கொல்லங்கோடு நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பிறகு முதல் முறையாக தோ்தல் நடத்தப்பட்டது. இதில் 33 நகராட்சி உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களும் நகராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனா். முதல் நகராட்சி தலைவா் பதவியை கைப்பற்றுவது யாா் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை நகராட்சியில் தோ்வு செய்யப்பட்ட உறுப்பினா்களும் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். அந்தந்த நகராட்சி அலுவலங்களில் இதற்கான விழா நடைபெற்றது. இதே போல், கன்னியாகுமரி,

சுசீந்திரம், அகஸ்தீஸ்வரம், ஆரல்வாய்மொழி என 51 பேரூராட்சிகளில் தோ்வு செய்யப்பட்ட 828 கவுன்சிலா்களும் அந்தந்த பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா்கள் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT