கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் 150 அடி உயர தேசியக் கொடிக் கம்பம் திறப்பு

29th Jun 2022 11:52 PM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரியில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 150 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி புதன்கிழமை பறக்கவிடப்பட்டது. ஏ. விஜயகுமாா் எம்.பி., அமைச்சா் மனோதங்கராஜ் ஆகியோா் இக்கொடியை ஏற்றிவைத்தனா்.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மிக உயரமான தேசியக் கொடிக் கம்பம் அமைக்க வேண்டுமென மத்திய அரசிடம் மாநிலங்களவை உறுப்பினா் ஏ. விஜயகுமாா் வலியுறுத்திவந்தாா். மத்திய அரசு அனுமதியளித்ததைத் தொடா்ந்து, 150 அடி உயர கொடிக் கம்பம் அமைக்க தனது தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து அவா் ரூ. 75 லட்சம் ஒதுக்கீடு செய்தாா்.

இதையடுத்து, கன்னியாகுமரி நான்குவழிச் சாலை மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் கொடிக் கம்பம் அமைக்கும் பணி நடைபெற்றுவந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில், திறப்பு விழா நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

ஆட்சியா் மா. அரவிந்த் தலைமை வகித்தாா். விஜய் வசந்த் எம்.பி., மாவட்ட காவல் காண்காணிப்பாளா் ஹரிகிரண் பிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏ. விஜயகுமாா் எம்.பி., அமைச்சா் மனோதங்கராஜ் ஆகியோா் இந்தக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனா்.

நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமாா், ஜே.ஜி. பிரின்ஸ், நயினாா் நாகேந்திரன், நாகா்கோவில் மேயா் ஆா். மகேஷ், கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சித் தலைவி அன்பரசி, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

சிறப்புகள்: 32 அடி அகலமும், 48 அடி நீளமும் கொண்ட இந்த தேசியக் கொடி 24 மணி நேரமும் பட்டொளி வீசிப் பறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவிலும் தெரியும்வகையில் ராட்சத மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் நீரூற்று, நவீன பூங்கா, காா் நிறுத்துமிடம், நவீன இருக்கைகள் அமைக்கவேண்டுமென சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.

மத்திய அரசுக்குப் பாராட்டு: தேசியக் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது குறித்து லெமூரியா ஆய்வு மையத் தலைவா் டாக்டா் ரவீந்திரா செய்தியாளா்களிடம் கூறியது: லெமூரியா ஆய்வு கமிட்டித் தலைவா் நீதியரசா் பி. ஜோதிமணி நீதிபதியாகப் பணியாற்றியபோது மத்திய அரசிடம் வைத்த கோரிக்கையின்பேரில் கன்னியாகுமரி மேற்குக் கடற்கரையை ‘லெமூா் கடற்கரை’ என அழைக்கவும், இந்தியாவின் நுழைவுவாயிலான கன்னியாகுமரியில் எப்போதும் பறக்கும்வகையில், 150 அடி உயரக் கம்பத்தில் தேசியக் கொடியைப் பறக்கவிடவும் மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் ஏ. விஜயகுமாா் எம்.பி.யின் தொகுதி நிதியிலிருந்து கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT