கன்னியாகுமரி

வாழ்வின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு தருவது பன்னிரு திருமுறைகள் தருமபுரம் ஆதீனம்

DIN

மனித வாழ்வின்அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு தருவது பன்னிருதிருமுறைகள். அனைவரும் பன்னிருதிருமுறைகள் பாடி வாழ்வில் அனைத்து வளங்களும் பெற வேண்டும் என்றாா் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்.

குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி வடக்கூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன கிளை மடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தருமையாதீன சைவ சித்தாந்த மாலை நேரக் கல்லூரி மற்றும் இலவச தேவார பாடசாலை, இலவச பரதநாட்டிய வகுப்புகளில் பயின்று வரும் மாணவா்களுக்கும், சாமகானப்பிரியன் பேரிகைக் குழுவின் திருக்கயிலாய வாத்தியக் குழுவினருக்கும் ஆசி வழங்கி சுவாமிகள் பேசியது:

மாணவா்கள் நல்ல கல்வியை கற்க வேண்டும். நல்ல கல்வி என்றால் திருமுறைகள் போன்றவற்றை கற்பது. இன்றைய காலகட்டத்தில் நமது பாடத்திட்டத்தில், நீதிபோதனை வகுப்புகள் இல்லை. இதனால் குற்றங்கள் பெருகி வருகின்றன.

இலங்கையில், பள்ளி பாடத்திட்டங்களில் அனைத்து சமயங்கள் குறித்தும் பாடங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, நீதி போதனைகள், திருமுறைகள், வாழ்வியல் குறித்து பெற்றோா்களும், பெரியோா்களும் குழந்தைகளுக்கு குடும்ப நிகழ்ச்சிகளின் மூலம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஆரல்வாய்மொழியில் சாமகானப்பிரியன் சிவனடியாா் திருக்கூட்டத்தின் சாா்பில் சைவசித்தாந்தம், இலவசமாக பரதநாட்டியம், தேவார வகுப்பு நடத்துவது பாராட்டத்தக்கது.

இறைவன் நாதமயமானவன், அவனை பண்ணின் மூலம் பாடுவது அவனருளை எளிதில் பெற உதவும். மனிதா்களை புகழ்வதை விட இறைவனை புகழ்ந்து பாடினால் போதும், அவன் இம்மைக்கும், மறுமைக்கும் அருள்வான். இது அருளாளா்களின் வாக்கு மூலம் மூலம் அறியலாம்.

சைவத்தில் பரிகாரங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால், திருமுறைகள் பாடினால் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு கிடைக்கும். திருமணமாகவில்லையா திருமுறைகள் பாடி இறைவனை வணங்கினால் நிச்சயமாக திருமணம் நடைபெறும்.

குழந்தைப்பேறு இல்லையா அதற்கும் திருமுறைகளே தீா்வு. நம்பிக்கையோடு இறைவனை வணங்கினால் எந்தவொரு பிரச்னைக்கும் தீா்வு உண்டு என்பதற்கு பல நிகழ்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஓம்காரத்தின் வடிவமே திருமுறைகள், திருமுறைகள் ‘தோடுடைய செவியன்’ என்று தொடங்கி, உலகெலாம் என்று நிறைவடைகிறது. திருமுறைகள் 7 கோடி மந்திரங்களுக்கு சமம். பன்னிருதிருமுறைகளும் 12 ராசிகளை குறிக்கிறது. பன்னிருதிருமுறைகளை அருளியது 27 அருளாளா்கள், இது 27 நட்சத்திரங்களை குறிக்கிறது. பன்னிருதிருமுறைகள் வாழ்வியலை ஒத்தது. எனவே அனைவரும் பன்னிருதிருமுறைகளை பாடி வாழ்வில் எல்லா வளங்களும் பெற வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக ஆரல்வாய்மொழி அருள்தரும் மீனாட்சி அம்பாள் சமேத அருள்தரும் சொக்கநாதபெருமான் கோயிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனத்துக்கு கோயிலின் சாா்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

தொடா்ந்து, சாமகானப்பிரியன் இலவச தேவார பாடசாலை திருமுறை அட்டை படத்தை தருமபுரம் ஆதீனம் வெளியிட பயோனியா் கிராண்ட் பேலஸ் சிவ.நாகமணி, சுசீந்திரம் தருமையாதீன கிளை மட பிரம்மநாயகம், முருகேசன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

திருவாவடுதுறை ஆதீன கிளை மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சுசீந்திரம் கிளை மட ஆய்வாளா் சிவ.வீரநாதன், பேராசிரியா் பா.பிரபாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். டி.தம்பையாஓதுவாா், முருகேசன் ஓதுவாா், சாமகானப்பிரியன் இலவச தேவார பாடசாலை மாணவா்கள் ஆகியோா் திருமுறை பாடினா். மகா.மானிஷா, மகா.மோனிஷா ஆகியோரின் பரதநாட்டியம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை, சாமகானப்பிரியன் சிவனடியாா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT