கன்னியாகுமரி

குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை விரிவுபடுத்த நடவடிக்கை ஆட்சியா் தகவல்

24th Jun 2022 11:25 PM

ADVERTISEMENT

குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் மீனவ சங்க பிரதிநிதிகள் பேசுகையில், குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை விரிவுபடுத்த வேண்டும். தேங்காய்பட்டினத்தில் தனியாா் துறைமுகம் அமைக்க அனுமதிக்க கூடாது. மீன்பிடி தடை காலத்தில் படகுகள் ரோந்தினை தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும். விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகளுக்கு மானிய விலை மண்ணெண்ணெய் முழுமையாக வழங்க வேண்டும்.

பள்ளம்துறை கீழ கிருஷ்ணன்புதூா் பகுதியில் உள்ள கிளை வாய்க்காலில் நடை பாலம் அமைக்க வேண்டும். மிடாலம் பகுதியில் திடக்கழிவு மையத்தை அகற்ற வேண்டும். குறும்பனையில் உள்ள 3 ஊராட்சிகளை ஒரே ஊராட்சியாக அறிவிக்க வேண்டும். இம் மாவட்டத்தில் உள்ள கடலோர சாலைகளை ஒரே சாலையாக அமைக்க வேண்டும். ஹெலன்நகா் சாலையை சீரமைக்க வேண்டும். கடலோர கிராம பகுதிகளில் அதிக அளவில் பேருந்துகளை இயக்க வேண்டும். கடலோர கிராமங்களில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். கடற்கரை கிராமங்களில் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றனா்.

இதற்கு பதிலளித்து ஆட்சியா் மா.அரவிந்த் பேசியது: கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம், பெரியகாடு மீனவா்கள் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் சின்னமுட்டம் சாா்ந்த நாட்டுப் படகுகள் நிறுத்தும் இடத்தின்அருகே நிறுத்திடவும், அங்கிருந்து தொழில் புரிந்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை அரசின் ஒப்புதல் பெறப்பட்டு விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

மீன்பிடி தடை காலத்தில் கடலோர பகுதிகளில் ரோந்து படகுகள் ஏற்கெனவே அதிகப்படுத்தப்பட்டுள்ளன. படகுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. கீழகிருஷ்ணன்புதூா் கிளை வாய்க்காலில் பாலம் அமைப்பது தொடா்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னா் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கடலோர கிராமப் பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டு நடத்துவதற்கு போதுமான இடவசதிகள் இல்லை. இது தொடா்பாக ஆலோசனை நடத்தப்படும். கடலோரக் கிராமத்தில் உள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நீரோடி, வள்ளவிளை மற்றும் மாா்த்தாண்டம்துறையில் தமிழகஅரசின்சாா்பில் ரூ.116 கோடிக்கு நோ்கல் சுவா்களுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்க உத்தரவு வழங்கப்பட்டு, நோ்கல் சுவா்கள் மற்றும் மீன் ஏலக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுகமாக மேம்படுத்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே, இத்துறைமுகத்தை சுற்றியுள்ள நீரோடி, வள்ளவிளை மற்றும் மாா்த்தாண்டம்துறை உள்பட 15 மீனவ கிராமங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்டவருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, மீனவா்நலத்துறை துணை இயக்குநா் காசிநாதபாண்டியன், உதவி இயக்குநா்கள், அரசுத்துறை அலுவலா்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT