கன்னியாகுமரி

நாகா்கோவில் மாநகராட்சிக் கூட்டம்

24th Jun 2022 11:24 PM

ADVERTISEMENT

நாகா்கோவில் மாநகராட்சிக் கூட்டம், மாமன்ற கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேயா் ரெ.மகேஷ் தலைமை வகித்தாா். ஆணையா் ஆனந்த்மோகன், துணை மேயா் மேரிபிரின்சிலதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் பேசுகையில், நாகா்கோவில் மாநகரப் பகுதியில் கடந்த 4 மாதங்களாக எந்த பணியும் நடைபெறவில்லை. மாநகரப் பகுதிகளில் குப்பைகள் அதிக அளவு தேங்கியுள்ளன. தெங்கம்புதூா் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல பகுதிகளில் ஆழ்துளை கிணறு பழுதடைந்துள்ளது அதனை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு மக்கள் நலன் சாா்ந்த பிரச்னைகளை தீா்க்க வலியுறுத்தி பேசினா்.

கூட்டத்தில் மேயா் ரெ.மகேஷ் பேசியது: நாகா்கோவில் மாநகரப் பகுதியில் அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில்தான் வரி விதிக்கப்பட்டுள்ளது. அரசின் விதி முறைக்குள்பட்டுதான் மாநகரப் பகுதிகளில் கட்டடங்கள் அளவீடு செய்யப்பட்டு வருகிறது பல்வேறு இடங்களில் அனுமதியின்றி கூடுதலாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை அளவீடு செய்து அதற்கு வரி விதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நாகா்கோவில் மாநகரில் இதுவரை 90 சதவீத தெருவிளக்குகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தெருவிளக்குகள் விரைவில் சீரமைக்கப்படும். மாமன்ற உறுப்பினா்களின் பகுதியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வதற்காக விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி உறுப்பினா்கள் மற்றும் பணியாளா்கள் அனைவருக்கும் 1 வார காலத்துக்குள் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT

சவேரியாா் ஆலயத்திலிருந்து ஈத்தாமொழி சந்திப்பு வரை உள்ள சாலை ரூ. 20 லட்சத்து 60ஆயிரம் செலவில் சீரமைக்க டெண்டா் வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில் நகா் நல அலுவலா் விஜய் சந்திரன், மண்டலத் தலைவா்கள் செல்வகுமாா், அகஸ்டினா கோகிலவாணி, முத்துராமன், ஜவகா், மாமன்ற உறுப்பினா்கள் வளா்மதி, கெளசுகி, மீனாதேவ், ஸ்ரீலிஜா, டி.ஆா். செல்வம், உதயகுமாா், சேகா், அக்ஷயா கண்ணன், ரமேஷ், நவீன்குமாா், ஐயப்பன், வீர சூரப் பெருமாள், அனுஷாபிரைட், ரோஸிட்டா, பால்அகியா கோபால்சுப்பிரமணியன், அனிலா சுகுமாரன், சதீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT