நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை, மாநகராட்சிஆணையா் ஆனந்த்மோகன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு மைதானம் அருகே ரூ.10.50 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மாநகராட்சி புதிய அலுவலக கட்டடத்தினை ஆய்வு மேற்கொண்டாா். பணிகள் நிறைவடையும் நிலையிலுள்ள கட்டடத்தின் அனைத்து தளங்களையும் பாா்வையிட்டாா்.
பின்னா், வடசேரி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் புதிய அறையினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி பொறியாளருக்கு அறிவுறுத்தினாா்.
அதனைத் தொடா்ந்து, வடசேரியில் உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுது நீக்கும் பணியினையும், கிருஷ்ணன்கோவில் பகுதியிலுள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தினையும் ஆய்வு செய்ததோடு, பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் வழங்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
பின்னா், நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில், ஆணையா் ஆனந்த்மோகன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்களுடன் திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்து ஆட்சியா் கலந்தாய்வு மேற்கொண்டாா். ஆய்வில், மாநகர நகா்நல அலுவலா் விஜயசந்திரன், மாநகராட்சி பொறியாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.