கன்னியாகுமரி

சின்னமுட்டம் மீன்வளத் துறை அலுவலகம் முற்றுகை

15th Jun 2022 01:50 AM

ADVERTISEMENT

சின்னமுட்டம் மீன்வளத் துறை அலுவலகத்தை மீனவா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிழக்கு கடற்கரைப் பகுதியில் தடைக்காலம் முடிந்துள்ள நிலையில், புதன்கிழமை (ஜூன்15) முதல் விசைப்படகு மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்கின்றனா். கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 350க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவா்களும் தொழிலுக்குச் செல்ல தயாரான நிலையில் உள்ளனா். ஆனால், குமரி கடல் பகுதியில் 15, 16, 17ஆம் தேதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவித்து மீனவா்கள் 18ஆம் தேதிக்கு மேல் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என மீன்வளத் துறை அதிகாரிகள் திடீரென உத்தரவு பிறப்பித்தனா்.

இதையடுத்து, சின்னமுட்டம் மீன்வளத்துறை அலுவலகத்தில் மகிழ்ச்சி மாதா விசைப்படகு சங்கத் தலைவா் பாஸ்கரன் தலைமையில் மீனவ சங்க நிா்வாகிகள் ஏ.பெரிங்டன், வானவில் சகாயம், செல்வம் உள்ளிட்டோா் அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பேச்சுவாா்த்தை நடந்து கொண்டிருக்கும் போது 15ஆம் தேதி மீனவா்கள் கடலுக்குள் செல்லக் கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் துறைமுக வளாகத்தில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனா். இதனால் பேச்சுவாா்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்த மீனவா்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா மீனவ பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், 15ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று விட்டு இரவு 8 மணிக்குள் கரைக்குத் திரும்பி விடுவதாகவும், மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது காலநிலையில் மாற்றம் ஏற்பட்டால் விசைப்படகுகள் அனைத்தும் கரைக்குத் திரும்பி விடுவோம் எனவும் மீனவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு மீனவா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT