கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களுக்கு திமுக ஆட்சியில் அதிக அளவில் நிதி ஒதுக்கி திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன என்றாா் குமரி கிழக்கு மாவட்டதிமுக பொறுப்பாளரும், நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ்.
இது தொடா்பாக அவா் நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: குமாரகோவில் முருகன் கோயிலில் நடைபெற்ற தோ் திருவிழாவில் வடம் பிடிக்க சென்ற அமைச்சா் த.மனோதங்கராஜீக்கு, பாரதிய ஜனதா கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது.
கடந்த அதிமுக ஆட்சியில் திருக்கோயில்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட , தற்போதைய திமுக ஆட்சியில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பா.ஜ.கவினா் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறாா்கள்.
கடந்த ஒராண்டில் மட்டும், குமரி மாவட்டத்திலுள்ள திருக்கோயில்களுக்கு ரூ.43 கோடிநிதி ஒதுக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் மூலவருக்கு தங்கக் கவசம் செய்ய ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாகா்கோவில் நாகராஜா கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், திருவிதாங்கோடு மகாதேவா் கோயில் உள்பட பல்வேறு கோயில்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை பாரதிய ஜனதா கட்சியினரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் வீண் வதந்திகளை பரப்பி வருகிறாா்கள். அமைச்சா் மனோதங்கராஜ் குறித்து வீண் வதந்திகளை பரப்புவோா் மீது முறையாக புகாா் கொடுத்து வழக்கு தொடருவோம்.
நாகா்கோவில் மாநகராட்சியை பொறுத்தவரை அரசின் கொள்கை முடிவின்படிதான் வரி உயா்த்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அதிக வரி சுமையை அளிக்கக் கூடாது என்ற அடிப்படையில், கடந்த 2008 ஆம் ஆண்டு நாகா்கோவில் நகராட்சியில் எப்படி இருந்ததோ அதே போல்தான் தற்போதும் இருக்கிறது. மண்டலங்கள் மாற்றப்படவில்லை.
நாகா்கோவில் மாநகரில் நடைபெற்று வரும் புதைச் சாக்கடை திட்டப் பணிகள் கடந்த மாதம் மே 31 ஆம் தேதி முடிப்பதாக தெரிவித்தனா். ஆனால் சில பணிகளின் காரணமாக பணிகள் முடிக்கப்படவில்லை. தற்போது சவேரியாா் ஆலயம் முதல் செட்டிகுளம் சந்திப்பு வரை உள்ள சாலையில் புதைச் சாக்கடை பணிகள் மற்றும் குடிநீா் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும். இன்னும் 2 மாத காலத்துக்குள் பணிகள் நிறைவு பெறும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா் என்றாா் அவா்.