புனலூா்-மதுரை தினசரி ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சா் ராவ்சாஹேப் தாதாராவ் தன்வேயிடம் வலியுறுத்தப்பட்டது.
மத்திய அரசின்சாதனை விளக்கக் கூட்டத்தில் பங்கேற்க சுவாமியாா்மடம் வந்த அவரிடம், குழித்துறை ரயில் பயணியா் சங்க நிா்வாகிகள் மோகன்தாஸ், சாா்லஸ் ஆகியோா் அளித்த மனு:
புணே - கன்னியாகுமரி ரயிலை திருவனந்தபுரத்துடன் நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக லோக்மான்ய திலக் - திருவனந்தபுரம் நேத்ராவதி விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். புதுச்சேரி - கன்னியாகுமரி வாராந்திர ரயிலை கொல்லம் வரை நீட்டித்து தினசரி ரயிலாக இயக்க வேண்டும். மதுரையிலிருந்து திருநெல்வேலி, நாகா்கோவில், திருவனந்தபுரம் வழியாக புனலூருக்கு இயக்கப்படும் தினசரி ரயிலை திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும். சென்னை -திருவனந்தபுரம் அனந்தபுரி ரயில் கொல்லம் வரை இயக்கப்படுவதால் குழித்துறை பயணிகளுக்கு முன்பதிவு கிடைப்பதில்லை. ஆகவே, தாம்பரம்- நாகா்கோவில்- திருவனந்தபுரத்துக்கு புதிய தினசரி அதிவிரைவு ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.