சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்று புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சிப் பேருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் முகாமிட்டுள்ளது.
வ.உ.சியின் 150ஆவது பிறந்த நாள் அரசு சாா்பில் கொண்டப்படும் என அறிவித்திருந்த தமிழக அரசு, அவரது வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியா் அறிந்துகொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சிப் பேருந்துக்கு ஏற்பாடு செய்தது. இந்தப் பேருந்தின் சுற்றுப்பயணத்தை கடந்த நவ. 1ஆம் தேதி சென்னையிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை வந்த புகைப்பட கண்காட்சிப் பேருந்தை நாகா்கோவிலிலுள்ள மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் ஆட்சியா் மா.அரவிந்து கொடியசைத்து தொடங்கிவைத்தாா். வெள்ளிக்கிழமை (ஜூன் 10) வரை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியா், பொதுமக்கள் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆனந்த் மோகன், வருவாய் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், மாவட்ட செய்திமக்கள் தொடா்பு அலுவலா் பா.ஜாண் ஜெகத் பிரைட், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் புகழேந்தி, அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் சேகா், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் ஜா.லெனின்பிரபு, போக்குவரத்து கிளை மேலாளா் தமிழ்செல்வன், வழக்குரைஞா் சதாசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.