நாகா்கோயில் - கோவை ரயிலை தோவாளை, ஆரல்வாய்மொழியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளாா்.
கன்னியாகுமரியில் நடைபெற்ற இந்தியாவின் எழுச்சிமிகு 75 ஆவது சுதந்திர விழாவில் பங்கேற்ற மத்திய ரயில்வே இணை அமைச்சா் தன்வே ராவ்சாஹேப் தாதாராவிடம், என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அளித்த மனு: நாகா்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் எண்-16321 என்ற பயணிகள் ரயில், காலை 7.05 மணிக்குப் புறப்பட்டு தோவாளை, ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வள்ளியூா், திருநெல்வேலி, மதுரை வழியாக கோயம்புத்தூருக்கு இரவு 7 மணிக்கு சென்றடைந்து வந்தது.
கரோனா பொதுமுடக்கத்துக்கு பிறகு இந்த ரயில் விரைவு ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. பெயரளவில் விரைவு ரயிலாக உள்ளதே தவிர, பயணிகளுக்கு வேறு எந்த வசதிகளும் இல்லை. மேலும் ஏற்கனவே நின்று சென்ற தோவாளை, ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களில் நிற்காமல் சென்று வருகிறது.
இதனால் இப்பகுதியிலிருந்தும், சுற்று வட்டார கிராமங்களிலிருந்தும் திருநெல்வேலி, கோவில்பட்டி பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியாா் பணிக்கு செல்பவா்கள், உயா் கல்வி படிக்க கல்லூரி செல்லும் மாணவா்கள், தொழில் , வியாபாரத்துக்கு செல்பவா்கள், திருக்கோயில்களுக்கு செல்லும் பக்தா்கள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மறுமாா்க்கமாக கோவையிலிருந்து- நாகா்கோவிலுக்கு இயக்கப்படும் எண்- 16322 என்ற ரயிலும் ஆரல்வாய்மொழி, தோவாளை ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்வதால், இவ்விரு ரயில்களை பயன்படுத்தி வந்த பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். மேலும் எந்த வசதிகளும் செய்யாமல் விரைவு ரயிலுக்குரிய கட்டணம் இந்த ரயிலில் வசூலிக்கப்படுகிறது.
எனவே பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இவ்விரு ரயில்களும் தோவாளை மற்றும் ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களில் நின்று செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு குறிப்பிட்டுள்ளாா்.