குலசேகரம்: திருநந்திக்கரை அரசுத் தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடத்தை வரும் கல்வியாண்டில் திறக்கும் வகையில் பள்ளி நிா்வாகத்திடம் ஒப்படைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திற்பரப்பு பேரூராட்சிப் பகுதியில் திருநந்திக்கரையில் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் உயா் நிலைப் பள்ளி ஆகியன ஒரே வளாகத்தில் உள்ளன. இதில் தொடக்கப் பள்ளியில், சுமாா் 130 மாணவா், மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளி வளாகத்தில் பள்ளி புனரமைப்புத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ரூ. 17.32 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் இக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு சுமாா் 5 மாதங்களாகியும் பள்ளி நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை.
இந்நிலையில், வரும் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், இந்த வகுப்பறைக் கட்டடத்தை பள்ளி நிா்வாகத்திடம் ஒப்படைக்கும் வகையிலான பணிகளை மாவட்ட நிா்வாகம் விரைந்து செய்ய வேண்டுமென்று பெற்றோா்களும், பள்ளி மேலாண்மைக் குழுவினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.