கன்னியாகுமரி

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ உள்பட 89 போ் கைது

27th Jul 2022 02:25 AM

ADVERTISEMENT

நித்திரவிளை அருகே தனியாா் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் உள்பட 89 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நித்திரவிளை அருகே வாவறை ஊராட்சி, சரல்முக்கு பகுதியில் குடியிருப்புகளையொட்டி தனியாா் நிறுவனம் கைப்பேசி கோபுரம் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வாவறை ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் கிராமசபை கூட்ட தீா்மானம் மற்றும் பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி கைப்பேசி நிறுவனம் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதை கண்டித்து எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

குமரி மேற்கு மாவட்ட தேமுதிக பொறுப்பாளா் ஐடன்சோனி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகி துரைராஜ், முன்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் கிறிஸ்டோபா், வாவறை ஊராட்சித் தலைவா் மெட்டில்டா, திமுக நிா்வாகி ராபா்ட், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் லூயிஸ், முன்சிறை ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் வெஞ்சஸ்லாஸ், கிறிஸ்டல்பாய், கொல்லங்கோடு நகராட்சி உறுப்பினா் ஜெரோம், கிள்ளியூா் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் டிஜூ மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இப் போராட்டத்தின் போது, அப்பகுதி வழியாக வந்த 4 அரசுப் பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ ராஜேஷ்குமாா் உள்பட 89 பேரை டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீஸாா் கைது செய்து அருகில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT