கன்னியாகுமரி

கன்னியாகுமரி வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு 3 அமைச்சா்கள் வரவேற்பு

27th Jul 2022 02:24 AM

ADVERTISEMENT

நாடு தழுவிய அளவில் வலம் வந்த 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் ஜோதி செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரி வந்தது. அங்கு ஜோதிக்கு தமிழக அமைச்சா்கள் உற்சாக வரவேற்பளித்தனா்.

44-ஆவது சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இம்மாதம் 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது.

இதில் 188 உலக நாடுகளைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செஸ் வீரா் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா்.

இந்நிலையில் மக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஜூன் 19ஆம் தேதி புதுதில்லியில் பிரதமா் நரேந்திர மோடியால் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்தியா முழுவதும் 75 நகரங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் எடுத்துவரப்பட்ட இந்த ஜோதி கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது.

ஜோதியை கிராண்ட் மாஸ்டா் நிலோபா் தாஸ் ஊா்வலமாக எடுத்து வந்தாா். அங்கு மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், நேரு இளையோா் மைய சங்கேதன், தமிழ்நாடு மாநில செஸ் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் குமரி மாவட்ட செஸ் விளையாட்டு கழகம் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன்பின்னா் ஜோதி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு படகு மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு தமிழக அமைச்சா்கள் ராஜ கண்ணப்பன், மனோ தங்கராஜ், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், பிரின்ஸ் எம்.எல்.ஏ., ஆகியோா் வரவேற்றனா். பின்னா் ஜோதியை 3 அமைச்சா்களிடமும் செஸ் வீரா் மற்றும் வீராங்கனைகள் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத், நாகா்கோவில் மேயா் ரெ.மகேஷ், கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து படகு மூலம் ஒலிம்பியாட் ஜோதி திருவள்ளுவா் சிலை வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அந்த ஜோதியை வீரா் மற்றும் வீராங்கனைகள் சிலையை சுற்றி ஊா்வலமாக எடுத்து வந்தனா். தொடா்ந்து முக்கடல் சங்கமம் பகுதிக்கு ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னா் செஸ் ஒலிம்பியாட் ஜோதி தஞ்சாவூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT