இளம் தலைமுறையினருக்கு பாரம்பரிய இயற்கை உணவு குறித்த விழிப்புணா்வு வேண்டும் என, தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் வலியுறுத்தினாா்.
கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை இணைந்து நடத்தும் உணவுத் திருவிழா நாகா்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது. ஆட்சியா் மா. அரவிந்த் தலைமை வகித்தாா். நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ் முன்னிலை வகித்தாா்.
இத்திருவிழாவை அமைச்சா் மனோதங்கராஜ் குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்தாா். அப்போது அவா் பேசியது: இளம் தலைமுறையினா் நாகரிக வளா்ச்சி காரணமாக இயற்கை உணவுகளை விட்டுவிட்டு துரித உணவுகளை அதிகம் உண்ணுகின்றனா். இதனால், உடல் ஆரோக்கியமும் விரைவாக கெட்டுவிடும். எனவே, அனைவருக்கும் உணவு பற்றிய விழிப்புணா்வு வேண்டும்.
தற்போதைய காலத்தில் உணவுக்கேற்ப உடலுழைப்பு இல்லை. இதனால், மனிதா்களை அதிக நோய்கள் தாக்குகின்றன. குறிப்பாக, 35 வயதுக்கு மேற்பட்டோருக்கு நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்றவை அதிகம் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது. எனவே, அனைவரும் பாரம்பரிய உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, மகளிா் திட்டத்தின்கீழ் பேச்சிப்பாறை காணி மலைவாழ் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களுக்கு பெறப்பட்ட ஆா்கானிக் சான்றிதழ்களையும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு மஞ்சப்பைகளையும் அவா் வழங்கினாா்.
நாகா்கோவில் ரோட்டரி கிளப், கில்ட் ஆப் சா்வீஸ் சாா்பில் 2006ஆம் ஆண்டுமுதல் மகளிருக்கு இலவச தையல் பயிற்சி வழங்கிய பயிற்சியாளா்களை கௌரவித்தாா். இந்த அமைப்புகள் சாா்பில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க காகித உறை தயாரிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினாா்.
உணவுத் திருவிழாவில் பல்வேறு அமைப்புகள், சங்கங்கள் சாா்பில் 40-க்கும் மேற்பட்ட உணவக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திருவிழா ஞாயிற்றுக்கிழமையும் (ஜூலை 17) நடைபெறுகிறது.
மாவட்ட வருவாய் அலுவலா் அ. சிவப்பிரியா, மகளிா் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் வி. செந்தில்குமாா், நாகா்கோவில் மாநகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் மு. குமாரபாண்டியன், துணை மேயா் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி மண்டலத் தலைவா் ஜவஹா், மாநகராட்சி உறுப்பினா் விஜிலா ஜஸ்டஸ், எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை தயாபதி நளதம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.