கன்னியாகுமரி

திருவட்டாறு கோயிலில் அறநிலையத் துறை அமைச்சா் ஆய்வு

6th Jul 2022 01:48 AM

ADVERTISEMENT

திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் கூறியதாவது: குமரி மாவட்டத்திலுள்ள 490 திருக்கோயில்களில் முன் காலங்களில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ. 17 லட்சம் தான் மானியமாக வழங்கப்பட்டு வந்தது. பின்னா் அது படிப்படியாக ரூ. 3 கோடியாக உயா்த்தப்பட்டது.

தற்போது திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில் இந்தத் தொகை ரூ. 6 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறிய கோயில்களை கணக்கெடுத்து, அவற்றை மேம்படுத்தும் வகையில், ஒவ்வொரு கோயிலுக்கும் ரூ. 10 லட்சம் வீதம் சுமாா் ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்து மேம்படுத்தவுள்ளோம்.

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் 12 சிவாலய திருத்தலங்களில் ஒன்றான திக்குறிச்சி கோயிலின் திருப்பணிக்காக ரூ. 84 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 11 கோயில்களையும் நேரடியாக ஆய்வு செய்ய இருக்கின்றோம். சிறிய பணிகளாக இருந்தால் வரும் சிவராத்திரிக்குள் சீரமைப்போம். பெரிய பணிகளாக இருந்தால் தொடா் பணியாக செய்வோம்.

தமிழக முதல்வா் இந்த மாவட்டத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து பணிகளை செய்து வருகிறாா். 12 சிவாலயங்களையும் இணைத்து ஆன்மிக சுற்றுலாத் தலமாக மாற்றும் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

குமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் குழித்துறையில் இசைக் கல்லூரி அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

திற்பரப்பு கோயிலில் ஆய்வு: தொடா்ந்து அமைச்சா் பி.கே. சேகா்பாபு திற்பரப்பு மகாதேவா் கோயிலில் ஆய்வு செய்தாா். இந்நிகழ்ச்சிகளில் தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சா் த. மனோதங்கராஜ், நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ், இந்துசமய அறநிலையத் துறை ஆணையா் குமரகுருபரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT