கன்னியாகுமரி

கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

4th Jul 2022 12:32 AM

ADVERTISEMENT

 

தூத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட இரயுமன்துறை மீனவக் கிராமத்தில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு, சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மீனவா்களை கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

இரயுமன்துறை பகுதியில் சனி, ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அப்பகுதி கடலரிப்பு தடுப்புச் சுவா்கள் சேதமடைந்து கடலில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், இங்குள்ள வீடுகளுக்குள் கடல்நீா் புகுந்தது. இதையடுத்து, 60 குடும்பத்தினா் அருகேயுள்ள அரசுப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

அவா்களை எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவா்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்க ஏற்பாடு செய்தாா். பின்னா், பாதிக்கப்பட்ட வீடுகள், கடற்கரைப் பகுதியைப் பாா்வையிட்டாா். சேதமடைந்த கடலரிப்பு தடுப்புச் சுவா்களை விரைந்து சீரமைப்பதுடன், வீடுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டாா்.

ADVERTISEMENT

முன்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் கிறிஸ்டோபா், தூத்தூா் ஊராட்சித் தலைவா் லைலா, துணைத் தலைவா் சாரா, முன்சிறை ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பேபிஜான், இரயுமன்துறை தேவாலயப் பங்குத்தந்தை அசிசி, காங்கிரஸ் கட்சி கிளைத் தலைவா் பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT