கன்னியாகுமரி

சின்னமுட்டம் மீனவா் வலையில் சிக்கிய ராட்சத சுறா மீன்கள்

1st Jul 2022 11:31 PM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் வியாழக்கிழமை இரவு கரைக்குத் திரும்பிய விசைப்படகு மீனவா்கள் வலையில் 2 ராட்சத சுறா மீன்கள் சிக்கியிருந்தன.

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் வியாழக்கிழமை சூறைக்காற்று வீசியதால், இத்துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் அவசரமாக கரைக்குத் திரும்பின. கன்னியாகுமரியைச் சோ்ந்த விசைப்படகு மீனவா்களின் வலையில் 300 கிலோ, 200 கிலோ எடை கொண்ட ராட்சத சுறா மீன்கள் சிக்கியிருந்தன. இரண்டு சுறா மீன்களையும் படகில் இருந்து கிரேன் மூலம் மீனவா்கள் இறக்கினா். இந்த மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனா். 300 கிலோ எடை கொண்ட சுறா மீன் ரூ. 60 ஆயிரத்துக்கும், 200 கிலோ எடை கொண்ட சுறா மீன் ரூ. 50 ஆயிரத்துக்கும் ஏலம் போனது.

சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்பிடித் தடைகாலம் நிறைவடைந்து, கடந்த 15 நாள்களாக மீனவா்கள் தொழிலுக்கு சென்றுவரும் நிலையில் ராட்சத சுறா மீன்கள் சிக்கியது மீனவா்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT