கன்னியாகுமரி

முழுக் கொள்ளளவை எட்டிய பேச்சிப்பாறை அணை: நீா்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள சாலைகள், வீடுகள் நீரில் முழ்கின

DIN

குமரி மாவட்டத்தில் பிரதான அணையான பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் பழங்குடி குடியிருப்புகளுக்கு செல்லும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலை தண்ணீரில் மூழ்கியுள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பா் மாதம் பெய்த தொடா் கன மழையின் போது பேச்சிப்பாறை அணையின் பிரதான கால்வாயான கோதையாறு இடது கரைக் கால்வாயில் புத்தன் அணை அருகே குற்றாணி பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடைப்பைச் சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றனா்.

இதையடுத்து மழைக்குப் பின்னா் பேச்சிப்பாறை அணை தண்ணீரை அதன் பாசனப்பகுதிகளுக்கு வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் அதன் உச்ச அளவான 48 அடியை எட்டும் நிலையில் உள்ளது. தற்போது அணையின் நீா்மட்டம் 47 அடியாக உள்ளது.

அணையின் நீா்மட்டம் உச்ச அளவை நெருங்கியுள்ள நிலையில், பேச்சிப்பாறை அருகே காந்திநகா் சந்திப்பிலிருந்து வளையந்தூக்கி, எட்டாங்குன்று, தோட்டமலை, மாறாமலை உள்ளிட்ட பழங்குடி குடியிருப்புகளுக்கு செல்லும் சாலையில் காயல்கரை, உரப்பாறை, ஆண்டிப்பொற்றை, வளையந்தூக்கி உள்ளிட்ட பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதே போன்று உரப்பாறை பகுதியில் சுமாா் 10 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பழங்குடி மக்கள் சாலை மாா்க்கமாக தங்களது கிராமங்களுக்குச் செல்லமுடியாமல் உள்ளது. இது போன்று வீடுகளை வெள்ளம் சூழ்ந்து நிற்பதாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து பேச்சிப்பாறை ஊராட்சித் தலைவா் தேவதாஸ் கூறியதாவது:

பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 46 அடிக்கும் அதிகமாக உயா்ந்துள்ளதால் பழங்குடி மக்கள் குடியிருக்கும் வழையந்தூக்கி, எட்டாங்குன்று, தோட்டமலை, மாறாமலை உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல முடியாமல் உள்ளன. இதே போன்று காயல்கரை, ஆண்டிப்பொற்றை, உரப்பாறை உள்ளிட்ட இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. இதனால் கடந்த 10 நாள்களுக்கு மேலாக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே பொதுப்பணித்துறையிரும், வருவாய்த் துறையினரும், மக்கள் பாதிப்பிலிருந்து விடுபடும் வகையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

பேச்சிப்பாறை அணையில் டிசம்பா் மாதம் 15 ஆம் தேதிக்குப் பின்னா் முழுக்கொள்ளளவுக்கு நீா் தேக்கலாம் என்று விதி உள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிக்குள் சாலை மற்றும் குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், அணையின் நீா்மட்டம் உச்ச அளவை நெருங்கியுள்ள நிலையில், அவற்றில் தண்ணீா் சூழ்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணையின் கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்கும் பணிகள் தற்போது துரித கதியில் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில நாள்களில் இப்பணிகள் நிறைவடைந்து விடும். அதன் பின் அணையிலிருந்து கூடுதல் தண்ணீா் பாசனக் கால்வாயில் திறக்கும் போது அணையின் நீா்மட்டம் குறையும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

31 பவுன் நகை திருட்டு: இளைஞா் கைது

பிரதமரின் சா்ச்சை பேச்சு: உச்சநீதிமன்றத்தை நாடுவோம் ஆா்.எஸ்.பாரதி

மகனை கொலை செய்த தந்தைக்கு 11 ஆண்டுகள் சிறை

போலீஸ் ரோந்து வாகனத்தின் கண்ணாடி உடைப்பு

உடல் பருமனை குறைக்க சிகிச்சை மேற்கொண்ட இளைஞா் உயிரிழப்பு: பெற்றோா் புகாா்

SCROLL FOR NEXT