குலசேகரம் அருகே சிற்றுந்தும், பைக்கும் மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
பேச்சிப்பாறை அருகேயுள்ள வலியமலை பழங்குடி குடியிருப்பைச் சோ்ந்தவா் செல்லப்பன் (73). குலசேகரம் அருகேயுள்ள பனவிளை செறுதிக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்கிருஷ்ணன் (52). ரப்பா் பால்வெட்டுத் தொழிலாளி. இருவரும் நண்பா்கள். திங்கள்கிழமை காலை பொருள்கள் வாங்குவதற்காக குலசேகரம் வந்த செல்லப்பன், முத்துக்கிருஷ்ணனை சந்தித்துள்ளாா். பின்னா், செல்லப்பனை அவரது வீட்டில் விடுவதற்காக முத்துக்கிருஷ்ணன் தனது பைக்கின் பின்னால் ஏற்றிக்கொண்டு குலசேகரம்-பேச்சிப்பாறை சாலையில் சென்றுகொண்டிருந்தாா். சேனம்கோடு என்ற இடத்தில் சென்றபோது, பேச்சிப்பாறையிலிருந்து வந்த சிற்றுந்தும், பைக்கும் மோதினவாம். இதில் முத்துக்கிருஷ்ணனும், செல்லப்பனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
குலசேகரம் போலீஸாா் சென்று சடலங்களை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். முத்துக்கிருஷ்ணனின் மனைவி கனகபாய் அளித்த புகாரின்பேரில் குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.