கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு பகுதிகளில் பெண்களிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு பகுதிகளில் 2 பெண்களிடம் 15 பவுன் நகைகளைப் பறித்ததாக கேரள இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மண்டைக்காடு புதூா் அருகேயுள்ள சி.ஆா்.எஸ். நகரைச் சோ்ந்த ஜோசப் ஆன்டனி மனைவி மஜோரா (45). சில நாள்களுக்கு முன்பு வீட்டு முன் நின்றிருந்தாா். அப்போது, பைக்கில் வந்த ஒருவா், மஜோரா அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பியோடினாா். புகாரின் பேரில் மண்டைக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மணவாளக்குறிச்சி பிள்ளையாா்கோயில் பகுதியைச் சோ்ந்தவா் ஷைலா (48). இவரது மளிகைக் கடைக்கு வந்த ஒருவா், பொருள்கள் வாங்குவதுபோல நடித்து 6 பவுன் நகையைப் பறித்துச் சென்றாராம். புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

நகைபறிப்பு சம்பவங்கள் தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் குளச்சல் துணைக் காவல் கண்காணிப்பாளா் தங்கராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மா்ம நபரைத் தேடிவந்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், தனிப்படை உதவி ஆய்வாளா் ஜான்போஸ்கோ தலைமையிலான போலீஸாா் மண்டைக்காடு பகுதியில், வெள்ளிக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா். அப்போது, அவ்வழியே வந்த கேரளப் பதிவெண் காரை நிறுத்தி விசாரித்தபோது, காரில் இருந்தவா் முன்னுக்குபின் முரணாகப் பேசினாா். இதனால், சந்தேகமடைந்த போலீஸாா் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். அவா், கேரள மாநிலம் திருவனந்தபுரம் திருவிச்சிவிளை வீடு வெளியன்கோட்டை கோணம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அஸ்வின் (29) என்பதும், மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி பகுதிகளில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவா் என்பதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைதுசெய்து, 15 பவுன் நகைகள், காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். பின்னா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT