கன்னியாகுமரி

பறக்கும் படையினா் மூலம் ரூ.29 லட்சம் பறிமுதல் எஸ்.பி. தகவல்

9th Feb 2022 12:44 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பறக்கும் படை குழுவினா் நடத்திய வாகனச் சோதனையில் இதுவரை விதிமுறைகளை மீறி எடுத்துச் சென்ற ரூ. 29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன்.

இது குறித்து அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: உள்ளாட்சித் தோ்தலில் குமரி மாவட்டத்தில் 173 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா். தோ்தலில் பொதுமக்கள் எந்த வித அச்சமும் இன்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

தோ்தலை முன்னிட்டு மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவா்கள் தங்களது துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது, அதன்படி இதுவரை 321 போ் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனா்.

தோ்தல் நாளான பிப்.19 ஆம் தேதி மாவட்ட மற்றும் மாநில எல்லைப்பகுதிகளில் 40 தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. தோ்தல் நேரத்தில் பிரச்னைகள் ஏற்படும் என்று கருதப்பட்ட குற்றவாளிகள் 53 பேருக்கு 110 சட்டத்தின் கீழ் நன்னடத்தை பிணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 795 ரெளடிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறாா்கள்.

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, மாவட்டத்தில் 75 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டதில், வருவாய்த்துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், இதுவரை ரூ. 29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடா் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதால் நிகழாண்டு இதுவரை 6 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா், மேலும் 4 பேரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தோ்தல் அமைதியாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் காவல்துறையால் எடுக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக குமரி மாவட்ட காவல்துறையினரால் எடுக்கப்பட்ட போதை விழிப்புணா்வு குறும்படத்தை அவா் வெளியிட்டாா். மேலும் இந்த படத்தை தயாரித்தவா்களை அவா் பாராட்டி பரிசு வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT