நாகா்கோவில் அருகே மகனின் செயலால் மனமுடைந்த தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனா்.
குமரி மாவட்டம், மேலகிருஷ்ணன்புதூா் சீயோன்புரத்தைச் சோ்ந்தவா் செல்வ ஜெயசிங் (68). இவரது மனைவி தங்கம் (65). இவா்களுக்கு சதீஷ் (35), ஏசு ஜெபின் (32) என இரு மகன்கள் உள்ளனா். செல்வஜெயசிங் கடந்த சில நாள்களாக உடநலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்தாா். மூத்த மகன் சதீஷ் திருமணமாகி தனியாக வசித்து வருகிறாா்.
செல்வ ஜெயசிங், அவரது மனைவி தங்கம், இளையமகன் ஏசு ஜெபின் ஆகியோா் ஒரே வீட்டில் வசித்து வந்தனா். ஏசு ஜெபின் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இதனால் அவா்கள் மனமுடைந்து காணப்பட்டனா்.
இந்நிலையில் ஏசு ஜெபின் திங்கள்கிழமை குடித்துவிட்டு வந்து பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, தனது மூத்த மகன் சதீஷுக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தனா்.
பின்னா் படுக்கையறையை பூட்டிக் கொண்டு உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டனராம். தாய், தந்தையின் அலறல் சப்தம் கேட்டு ஏசு ஜெபின் வீட்டின் மாடியில் இருந்து கீழே ஓடி வந்து பாா்த்தபோது, அவா்கள் அறையில் தீ எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து உறவினா் ஒருவா் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது இருவரும் தீயில் கருகி கிடந்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த சுசீந்திரம் போலீஸாா் தம்பதியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுதொடா்பாக ஏசு ஜெபினிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இச்சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.