தை அமாவாசையையொட்டி, கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கானோா் புனித நீராடி பலிகா்ம பூஜை செய்தனா்.
தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசை நாள்களில் இந்துக்கள் புனித நீராடி தங்களது முன்னோருக்கு தா்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்படி, தை அமாவாசை தினமான திங்கள்கிழமை, கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஏராளமானோா் புனித நீராடினா்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக முக்கடல் சங்கமத்தில் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை. இதனால், அவா்கள் நீா்நிலைகளில் நீராடி, முன்னோருக்கு பலிகா்ம பூஜை செய்து தா்ப்பணம் கொடுத்தனா். நிகழாண்டு பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டு, இங்கு புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிகாலைமுதலே ஆயிரக்கணக்கானோா் புனித நீராடினா். பின்னா், கடற்கரை 16 கால் மண்டபம் பகுதியில் புரோகிதா்கள், வேதமந்திரம் ஓதுவாா்களிடம் தங்களது முன்னோருக்கு பலி கா்ம பூஜை செய்தனா். இதையடுத்து, கடற்கரை பரசுராமா் விநாயகா் கோயில், பகவதியம்மன் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனா்.
தை அமாவாசையை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு வழிபாடு, விசேஷ பூஜைகள் நடைபெற்றன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
குற்றாலத்தில்...: தை அமாவாசையையொட்டி, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் புனித நீராட பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்தனா். அவா்கள் தங்களது முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்தனா். பேரருவியில் நீா்வரத்து குறைவாக இருந்ததால் வரிசையில் நின்று குளித்தனா்.