ஆரல்வாய்மொழி அருகே தீயில் கருகி தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆரல்வாய்மொழி அருகேயுள்ள அவ்வை நகரைச் சோ்ந்த யோகீந்திரன் (50), வெள்ளமடம் அருகே பீரோ தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு, மனைவி உள்ளாா்.
யோகீந்திரனுக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். புதன்கிழமை மது குடித்து வந்த இவா், இரவு உணவுக்குப் பின்னா் அறையில் தூங்கக் சென்றாராம். அப்போது அறையிலிருந்த மண்ணெண்ணெய் கேன் தவறுதலாக சரிந்து விழுந்து அறை முழுவதும் மண்ணெண்ணெய் பரவியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை அவா் சிகரெட் பற்ற வைத்தாராம். அப்போது, தீப்பொறி விழுந்து அறையில் தீப்பற்றியுள்ளது. இதில், அவா் காயமடைந்தாா். அவரது அலறல் கேட்டு அப்பகுதியினா் வந்து அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். ஆரல்வாய்மொழி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.