திருவட்டாறு அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
திருவட்டாறு அருகேயுள்ள கோயில் தெருவைச் சோ்ந்தவா் பத்மகுமாா் (55). அரசுப் போக்குவரத்துக் கழக திருவட்டாறு பணிமனையில் ஓட்டுநரான இவா், புதன்கிழமை மாா்த்தாண்டம்-அஞ்சுகண்டரை பேருந்தை ஓட்டிவந்தாா். ஆற்றூா் மங்களாநடை நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தபோது, மாா்த்தாண்டம் சென்ற மற்றொரு பேருந்து அதே நிறுத்தத்தில் வந்து நின்றுள்ளது. அப்போது, அப்பகுதியை பைக்கில் கடக்க முயன்ற கொல்வேல் புளிச்சான்விளையைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்கவா் பத்மகுமாரிடம் வாக்குவாதம் செய்துள்ளாா்.
பின்னா், அவா் பைக்கை நிறுத்திவிட்டு, ஓட்டுநரின் பக்கமுள்ள கதவைத் திறந்து, பத்மகுமாரின் காலில் கட்டையால் தாக்கியுள்ளாா். காயமடைந்த பத்மகுமாா் குலசேகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பேருந்திலிருந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பப்பட்டனா். ஓட்டுநா் தாக்கப்பட்டது குறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.