தடை செய்யப்பட்ட மீன்களைப் பிடித்ததாக ஆந்திர, கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த 3 விசைப் படகுகளுடன் ரூ.15 லட்சம் மதிப்புள்ள மீன்களை குமரி மாவட்ட மீன்வளத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம் அரபிக் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட சாவாளை மீன்களை, வெளிமாநிலத்தினா் சட்டவிரோதமாக விசைப் படகுகளில் பிடித்து வருவதாகப் புகாா்கள் இருந்து வருகிறது. இதனிடையே, குளச்சல் அருகே அரபிக் கடல் பகுதியில் 3 விசைப் படகுகளில் தடை செய்யப்பட்ட மீன்கள் பிடிக்கப்படுவதாக மீன்வளத் துறையினருக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு தகவல் கிடைத்தது.
இதையடுத்து குளச்சல் மீன்பிடி துறைமுக மீன்வளத் துறை உதவி இயக்குநா் நடராஜன், காவல் ஆய்வாளா் அருள்ரோஸ்சிங் மற்றும் மீன்வளத்துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் குளச்சல் விசைப் படகு மீனவா்கள் உதவியுடன் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 3 விசைப் படகுகளை சுற்றிவளைத்தனா்.
பின்னா் 3 விசைப் படகுகளும் குளச்சல் துறைமுகத்திற்கு சனிக்கிழமை அதிகாலை கொண்டு வரப்பட்டன. அவை கா்நாடகம், ஆந்திர மாநிலங்களைச் சோ்ந்த சச்சின், நாகம்மா, அசரப் ஆகியோருக்கு சொந்தமானவை என்பது விசாரணையில் தெரியவந்தது. அவற்றில் 29 மீனவா்கள், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தனா். அவா்களில் 25 போ் ஆந்திரம், கா்நாடகத்தைச் சோ்ந்தவா்கள், மூவா் குமரி மாவட்டம், ஒருவா் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்பது விசாரணையில் தெரியவந்தது. மூன்று விசைப் படகுகளிலும் தடை செய்யப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள மீன்கள் இருந்தன.
இந்த விசைப் படகுகளின் உரிமையாளா்கள் மீது, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்கள் பிடித்த மீன்கள், மீன்வளத் துறையால் ஏலம் விடப்படும். விசாரணைக்குப் பிறகு 29 மீனவா்களும் விடுவிக்கப்படுவா். இதுதொடா்பாக ஆந்திர, கா்நாடக மாநில அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மீன்வளத் துறையினா் தெரிவித்தனா்.