கன்னியாகுமரி அருகே பெரியவிளை முக்கிய சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைகள் சட்டப் பாதுகாப்பு இயக்கம், ஐ ஆன் நியூ இந்தியா, சமூக விடியல் இயக்கம், பெரியவிளை ஊா் பொதுமக்கள் கூட்டமைப்பு ஆகிய இயக்கங்கள் சாா்பில் இப்போராட்டம் நடைபெற்றது.
குடியரசுத் தலைவா், பிரதமா், முதல்வா் ஆகியோருக்கு புறாக்கள் மூலம் தகவல் அனுப்பும் வகையில் நூதனப் போராட்டம் நடைபெற்றது.
ஊா் பொதுமக்கள் கூட்டமைப்புத் தலைவா் தங்கமுத்து நாடாா் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற பேராசிரியா் சுந்தரலிங்கம், ஐ ஆன் நியூ இந்தியா அமைப்பின் இயக்குநா் சுபாஷ்சந்திரன், ஓய்வுபெற்ற ஆசிரியா் பால்பாண்டியன், செல்வன், ராசப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பெரியவிளையில் உள்ள டாஸ்மாக் கடையால் இவ்வழியே பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றுவரும் மாணவிகள், பெண்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. கடை அருகே ஆலயங்கள், பள்ளிகள், குடியிருப்புப் பகுதிகள் உள்ளன.
அவ்வழியே இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.